கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்… மனைவி கண்முன்னே கணவர் மரணம்!

Published On:

| By vanangamudi

சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் மனைவி கண்முன்னே கணவர் உட்பட இருவர் உடல்நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேசன் (வயது 55) – நிர்மலா தம்பதியர்.

திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக இவர்கள் இன்று காலை சேலத்தில் இருந்து தங்களது காரில் புறப்பட்டு ஓசூர் நோக்கி சென்றனர்.

மதியம் 3 மணியளவில் சாப்பிடுவதற்காக கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னூர் பஸ் நிறுத்தம் அருகே காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடியே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது வேகமாக மோதியது.

இதில் கணேசன் மற்றும் ஓட்டுநர் சிவசங்கர் (வயது 59) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிர்மலா, தன் கண்முன்னே பலியான கணவர் கணேசனின் உடலைக்கண்டு கதறியழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வேகமாகவும், அலட்சியமாகவும் கண்டெய்னர் லாரி ஓட்டி வந்த சேலத்தைச் சேர்ந்த கங்காதரனை (வயது 37) போலீசார் கைது செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share