தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவை கார் வெடிப்பிற்கு பிறகு இந்தியா முழுவதும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்தது.
அதன்படி சென்னையில் மட்டும் 18 நபர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வரும் ஐந்து நபர்களின் வீடுகளில் சென்னை காவல்துறை சோதனை நடத்தி வருகிறது.
இன்று(நவம்பர் 10) காலை மண்ணடி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் சென்னை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய நபர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 5 நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் இந்த சோதனை நடைபெறுகிறது.
ஓட்டேரியில் சலாவுதீன் என்பவர் வீட்டில் வண்ணாரப்பேட்டை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையிலும், எம்கேபி நகரில் ஜகுபர் சாதிக் என்பவர் வீட்டிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.ஐ.ஏ சோதனை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, காவல்துறையினர் தனியாக சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கலை.ரா