ஆன்லைன் மூலம் பண மோசடி இழப்புக்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. consumer court order against bank
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா. இவர் சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மொத்தப் பணமும் அபேஸ்! consumer court order against bank
அதில், “கடந்த ஜூலை 7 ஆம் தேதி எனக்கு மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாக ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ’நான் அனுப்பிய பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகவும், எனது ஆதார் அட்டை மூலம் பல்வேறு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம்தான் சட்டவிரோத பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் சென்னை பெசன்ட் நகரில் உள்ள என்னுடைய தனியார் வங்கி கணக்கில் இருந்த மொத்தம் ரூ.19,91,687 பணத்தையும் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். அந்த பணம் திரும்ப அனுப்பப்படும் என தெரிவித்து செல்போன் அழைப்பை துண்டித்தனர்.
உறுதி செய்யாமல் கடன் வழங்கிய வங்கி!
அதன்பின்னர் தான் மோசடி கும்பல் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனது வங்கி கணக்கில் ரூ.5,81,366 மட்டுமே இருந்தது. மோசடி கும்பல் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது, நான் தனிநபர் கடன் கேட்பது போன்று மோசடி கும்பல் வங்கிக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளது, ஆனால் வங்கி நிர்வாகம் என்னிடம் எந்த விதமான உறுதியும் செய்யாமல் 15 லட்சம் ரூபாயை கணக்கில் வரவு வைத்ததும், அந்த பணத்தையும் சேர்த்து மோசடி கும்பல் அபகரித்ததும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக வங்கி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோசடி கும்பலில் வங்கி கணக்கு தெரிந்தபோதும், அதனை வங்கி நிர்வாகம் முடக்கம் செய்யவில்லை. எனவே, எனது வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பறித்த பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்’என்று மதுமிதா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சேவை குறைபாடே காரணம்!
இந்த மனு நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்தாரா என மனுதாரரிடம் உறுதி செய்யாமல், கடன் அனுமதித்தது வங்கி நிர்வாகத்தின் சேவை குறைபாடாக ஆணையம் கருதுகிறது. எனவே, அனுமதிக்கப்பட்ட ரு.15,04,101 கடன் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், மோசடி கும்பலின் வங்கி கணக்கு விவரம் தெரிந்த போதும் பணத்தை திரும்ப பெறுவதற்கு வங்கி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மோசடி கும்பல் அபகரித்த மனுதாரரின் சொந்த பணத்தை அவருக்கு திரும்ப வழங்க வேண்டும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கும் சேர்த்து ரூ.2 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் மொத்தமாக பணம் வழங்க வேண்டும்” என்று நுகர்வோம் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.