தமிழ்நாடு காவல்துறைக்குள்ளேயே மோதல்… முதல்வர் அறிவாரா?

தமிழகம்

தமிழக காவல்துறையில் உள்ள முக்கிய பிரிவினருக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்து கடந்த மே 13 ஆம் தேதி முதலான சில நாட்களில் 22 பேர் வரை உயிரிழந்தனர்.

கடந்த மே 15ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களையும், இறந்தவர்களின் குடும்பத்தினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது மருத்துவமனை வளாகத்திலேயே ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், மதுவிலக்கு பிரிவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதுவே இப்போது காவல்துறையின் இந்த இரு பிரிவுகளிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம்…

“அன்று முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, சுகாதாரத் துறை செயலாளர், முதல்வர் தனி செயலாளர், டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், கூடுதல் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி, அப்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீநாதா உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பேசியபோது, ’கள்ளச்சாராயத்தை தடுப்பது மாவட்ட எஸ்பி வேலை, ஒரு மாதம் முன்பே அலர்ட் செய்து மெமோ அனுப்பி விட்டேன்” என்று கூறினார்.

அவர் இப்படி சொன்னதும் முதல்வர் ஸ்டாலினின் கோபம் எஸ்பி மீது திரும்பியது.

டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், உளவுத் துறை கூடுதல் டிஜிபி மூவரும் பதில் எதுவும் கூறாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.

காரணம், கள்ளச்சாராயத்தை முழுமையாக தடுத்து கண்காணிக்கும் பணி மதுவிலக்கு அமலாக்க பிரிவு பணி.

முதல்வருடனான ஆலோசனை முடிந்ததும், உடனிருந்த அதிகாரிகளிடம், ‘மகேஷ் குமார் அகர்வால் அப்படி பேசியிருக்கக்கூடாது’ என்று டிஜிபி சைலேந்திர பாபு வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி அலுவலகத்திலிருந்து மாவட்ட எஸ்பி மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.களுக்கு மெமோ ஒன்று இமெயில் மூலம் அனுப்பப்பட்டது.

அந்த மெயிலில், ‘ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் பட்டியல், அவர்களிடம் மாமூல் வாங்கும் ஏட்டு, எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் மற்றும் டிஎஸ்பி பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த மெயில் விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சட்டம் ஒழுங்கு பிரிவு அதிகாரிகள் நம்மிடம்,

“மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு பணி செய்ய போகக் கூடியவர்கள் 99.9% சதவீதம் சம்பாதிக்க போகக் கூடியவர்கள் தான். அதுவும் ஒருவருக்கு ஒரு முறைதான் வாய்ப்பு கொடுப்பார்கள்.

எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் வரையிலான அதிகாரிகளுக்கு ஒரு வருடமும், டிஎஸ்பி முதல் எஸ்பி மற்றும் அதிகாரிகளுக்கு இரண்டு வருடங்கள் வாய்ப்புகள் கொடுக்கப்படும்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வேலை செய்பவர்களின் பிரதான வேலை, மாமூல் வாங்குவதுதான் என்பது காவல்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

இப்படி கள்ளச்சாராயத்தை மட்டுமே தடுக்கக்கூடிய பணியாக இருக்கக் கூடிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கள்ளச்சாராயத்தை தடுப்பது மாவட்ட எஸ்பிக்குதான் முழு பொறுப்பு என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை அலுவலகம் அனுப்பியிருக்கும் பெயர் பட்டியலில் மாமூல் வாங்கக்கூடிய மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள் இடம்பெறவில்லை.

அப்படி என்றால் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் உள்ளவர்கள் யாரும் மாமூல் வாங்கவில்லையா? அதைப் பற்றி சட்டம் ஒழுங்கு பிரிவு அதிகாரிகள் யாரும் இதுவரையில் கேட்காதது ஏன்?” என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு சட்டம் ஒழுங்குப் பிரிவினர் மதுவிலக்குப் பிரிவுடன் உரசி வருகின்றனர். வாட்ஸ்அப் மூலம் விவாதங்களும் நடந்து வருகிறது. மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாங்கும் மாமூல் விவகாரத்தையும் கள்ளச்சாராய வியாபாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலத்தையும் சட்டம் ஒழுங்கு போலீஸார் ரெக்கார்டிங் செய்து வருகின்றனர் என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.

இந்தசூழலில் தமிழக காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுக்கும் தலைவராக இருக்கக்கூடிய டிஜிபி மௌனமாக இருப்பதுதான் ஏன் என்ற கேள்வி போலீஸ் வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.

கள்ளச்சாராயத்தை ஒடுக்குவதற்கு பதிலாக… சட்டம் ஒழுங்கு போலீஸாரும், மதுவிலக்கு போலீஸாரும் ஒருவரை ஒருவர் எக்ஸ்போஸ் செய்வதில்தான் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த போக்கை தடுத்து நிறுத்தாவிடில் மேலும் பல கள்ளச் சாராய மரணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முதல்வர் இதில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கை போலீஸ் உயரதிகாரிகள் மத்தியில் வலுத்துள்ளது.

-வணங்காமுடி

வந்தே பாரத் வடகிழக்கின் சுற்றுலாவை மேம்படுத்தும்: மோடி

எம்.ஜி.ஆர் பல்கலைக்கு புதிய துணைவேந்தர்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்

Conflict Between Tamil Nadu police over Illegal Liquor Issue
+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *