எது இருந்தால் சிறப்பு… தன்னம்பிக்கையா? தெளிவா?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

தனியார் நிறுவனங்களிலும், பள்ளி-கல்லூரி போன்ற இடங்களிலும்… ஏன் பல வீடுகளிலும் கூட தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி என்றுதான் சொல்லித்தர முயல்கிறார்கள்.

தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற போதனையும் வழங்கப்படுகிறது! ஆனால், தெளிவில்லா தன்னம்பிக்கை எவ்வளவு பெரிய அபாயம் என்பதை பலரும் அறிவதில்லை! சத்குருவின் இந்த கட்டுரை இதுகுறித்த ஒரு பார்வையை வழங்குகிறது!

கேள்வி: தன்னம்பிக்கை, தெளிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு கண்பார்வை சற்றே மங்கலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்னால் சரியாகப் பார்க்கமுடியாது, ஆனால் ஒரு கூட்டத்தை நான் கடந்து செல்லவேண்டும். ‘என்னால் நிச்சயம் முடியும்’ என்ற தன்னம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கிறது. அதன் துணையோடு, அந்த கூட்டத்திற்குள் நான் நடந்து சென்றால், என்னவாகும்?

பலர் தங்கள் வாழ்வை இப்படித்தான் நடத்திக் கொள்கிறார்கள், வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு. சரியான பார்வை இல்லை, ஆனால் அது ஒரு பிரச்சினை இல்லை… அவர்கள் தான் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்களே!! இது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களை சுற்றி இருப்பவருக்கும் கூட ஆபத்து தான்.
என் பார்வை தெளிவாக இருக்குமானால், எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், யாரையும் இடித்துவிடாமல் என்னால் கடந்து போக முடியும்.

என் பார்வை மங்கலாக இருந்தால், ‘எனது பார்வை சரியில்லை’ என்ற பணிவேனும் என்னிடம் இருந்தால், வேறொருவரின் துணை ஏற்று, மெதுவாக மென்மையாக பயணிப்பேன். தெளிவான பார்வை இருப்பவரைப் போன்று என்னால் வேகமாக செல்ல முடியாமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சமாக மென்மையாகவேனும் நான் நடப்பேன்.

தெளிவான பார்வை கிடையாது, ஆனால் தன்னம்பிக்கை மட்டும் இருக்கிறது என்றால், நான் ஒரு நடமாடும் ஆபத்து தான். இதுதான் இன்று எல்லா இடத்திலும் நடக்கிறது.

ஏனெனில் தன்னம்பிக்கையோடு வாழுமாறு நாம்தான் மக்களுக்கு போதனை செய்து கொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை என்பது தெளிவான பார்வைக்கு ஒரு விதத்தில் மாற்று என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது உண்மையல்ல.

Confidence or clear sadhguru article

உதாரணத்திற்கு, உங்கள் வாழ்வில் பெரும் முடிவுகள் எடுக்க வேண்டிய தருணங்கள் வரும்போது, அது சொந்த வாழ்க்கையாக இருந்தாலும், தொழில் விஷயமாக இருந்தாலும், ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிப் பார்த்து, ‘தலை விழுந்தால் இப்படி செய்வோம், பூ விழுந்தால் அப்படி செய்வோம்’ என்று முடிவு செய்பவர் நீங்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இரண்டு வாய்ப்புகளில் ஏதோ ஒன்று எப்படியும் நடக்கும். எனவே உங்கள் தேர்வு நிச்சயம் ஐம்பது சதவிகிதம் சரியாக இருக்கும்! ஐம்பது சதவிகித நேரம் மட்டுமே நீங்கள் சரியான முடிவு எடுப்பீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்ற வேலை இரண்டே இரண்டு தான் – ஒன்று ஜோசியம் சொல்வது, மற்றொன்று வானிலை கணிப்பது.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு ஐம்பது சதவிகித சரியான முடிவுகளை வைத்து உங்களால் காலம் தள்ள முடியாது. உங்களை வேலையை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள்.

கர்நாடக மாநிலத்தில் மங்களூர் என்ற ஒரு சிறிய அழகான நகரம் உண்டு. நான்கு ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அவ்வூருக்கு நான் செல்ல நேர்ந்தது. எழுபத்தைந்து வயதைத் தாண்டிய ஹோமியோபதி மருத்துவர் ஒருவர், அங்கு தம் சிறிய மருத்துவ மையத்தை நடத்தி வந்தார்.

அம்மையத்தில் அவரை நான் சந்திக்கச் சென்றேன், சிகிச்சைக்கு அல்ல, அவரைக் காண வேண்டும் என்றுதான். இந்த மருத்துவமையம் மலபார் பகுதியில் உள்ளது. அங்கு பாம்புகள் அதிகம் இருப்பதால், அவ்விடத்தில் பாம்புக்கடிகள் சர்வ சாதாரணம். இவரின் மையத்திற்கு வெளியே, ‘அனைத்துப் பாம்புக்கடிகளுக்கும் பொதுவான விஷமுறிவு இங்கே கிடைக்கும்’ என்று ஒரு விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது.

என் வாழ்நாள் முழுவதும் பாம்புகளோடு பழகி, வாழ்ந்து, பல கடிகள் அவற்றிடம் பெற்று… இன்றும் உயிரோடு இருக்கும் அளவிற்கு பாம்புகளை நன்கு அறிந்தவன் நான். பாம்புகளுடனான எனது சிநேகிதம் இப்போதையதல்ல.

இந்தியாவில் இருக்கும் பாம்புகளின் விஷம் இரண்டு வகை. ஒன்று, நரம்புமண்டலத்தை பாதிக்கும் ‘நியுரோ டாக்ஸின்’ எனும் விஷம். மற்றொன்று, இதயம் மற்றும் இரத்தநாளங்களை தாக்கும் விஷம். மிகக் குறைந்த அளவு பாம்புகளே இரண்டு வகையான விஷங்களையும் கொண்டவை.

இந்த இருவகை விஷங்களும் முற்றிலும் மாறுபட்டவை என்பதால், இவை இரண்டிற்கும் பொதுவான ஒரு விஷமுறிவு இருக்கமுடியாது. எவ்வகையான பாம்பு உங்களைத் தீண்டியது என்று இன்று அடையாளம் காண முடியாததால், மருத்துவர்கள் பாம்புக்கடி என்றால், இரண்டு வகையான விஷமுறிவுகளையும் சேர்த்து, கடிபட்டவருக்கு கொடுக்கின்றனர். இது உடலை பெருமளவில் பாதிக்கும்.

இப்படியே நான் அந்த மருத்துவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘இதுபோன்ற விளம்பரத்தை ஏன் இங்கு மாட்டியிருக்கிறீர்கள்? இரண்டிற்கும் பொதுவான விஷமுறிவு என்று ஏதும் கிடையாதே.’ என்றேன். அவர் சாதுர்யமானவர். சொன்னார், “பாருங்கள். இந்தியாவில் 90 சதவிகித பாம்புகள் விஷமற்றவை. அதனால் இந்த விஷமுறிவு 90 சதவிகித நேரம் வேலை செய்யும்!” என்று.

எந்த விஷயத்திலும் தொண்ணூறு என்பது நல்ல சதவிகிதம் தான். தன்னம்பிக்கையும் இது போலத்தான். ஒரு பாம்பு உங்களைத் தீண்டினால், தன்னம்பிக்கையுடன், ஆகாயத்தைப் பார்த்து, ‘தாம்-தூம்-திஷ்-திஷ்-திஷ்’ என்று உத்வேகத்துடன் சொல்லுங்கள், அந்த விஷம் உங்களை விட்டு நீங்கிவிடும்.

நிஜமாகத்தான்!! எப்படியும் 90 சதவிகித நேரம் அது பலித்துவிடும் அல்லவா? மக்கள் இப்படித்தான் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றனர். 90 சதவிகிதம் வேலை செய்வதால் மக்கள் நம்பிக்கையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கின்றனர்.

ஆனால் இது வாழ்வதற்கு முட்டாள்தனமான வழி இல்லையா? உங்களுக்குத் தேவை தெளிவு, தன்னம்பிக்கையல்ல.

நீங்கள் விரும்பும்படி உங்கள் வாழ்க்கை நடக்கவேண்டும் என்றால், அதற்கு முதலில் தேவை, ‘எனக்கு இதுதான் வேண்டும்’ என்ற தெளிவான சிந்தனை. மிக எளிய பயிற்சிகளும் இத்திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள பெருமளவில் உதவி செய்யும்.

தினமும் காலை நீங்கள் எழும்போது, உங்கள் படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து, உங்கள் உள்ளங்கைகளை மேல்முகமாக விரித்து வைத்து, கண் மூடி, ‘எதெல்லாம் நீங்கள் இல்லை’ என்பதை மனதில் தெளிவாகப் பாருங்கள்.

இதுவரை நீங்கள் சேகரித்துள்ள – உங்கள் வீடு, குடும்பம், உறவுகள், பட்டங்கள், உடல், துணி அனைத்தையும் நிறைவுடன் பாருங்கள். இது எல்லாம் உங்களுக்குக் கிடைத்ததற்கு நன்றியுடன் இருங்கள்.

அதே நேரத்தில், ‘இவையெல்லாம் நான் சேகரித்தது’ என்று பார்த்து, மனதிலே ஓரமாக வையுங்கள். நீங்கள் சேர்த்தவை உங்களுடையதாக இருக்கலாம், ஆனால் அது ‘நீங்கள்’ ஆக முடியாது. இப்படி காலையில் பத்து நிமிடம், இரவில் பத்து நிமிடம் தினமும் நீங்கள் செலவு செய்தாலே, உங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும்.

இந்த செயல்முறைக்கு, ஒரு குருவிடம் இருந்து முறையாக தீக்ஷை பெற்றால், இதுவே வேறு ஒரு நிலையில் நிகழும். ஆனால் அது போன்ற ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் வரை, இதை உங்களுக்கு நீங்களே செய்யலாம். இது உங்களுக்குத் தெளிவான சிந்தனை கிடைப்பதற்கு நிச்சயம் வழி செய்யும்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

சுவாசம் விடுதலைக்கான பாதை! – சத்குரு

ஆளுநர் மீது முதல்வர் புகார்: குடியரசுத் தலைவர் எடுத்த நடவடிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *