மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனை மிரட்டிய நடத்துநர் சஸ்பெண்ட்!
அரசு விரைவு பேருந்தில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா ஏறுவதற்கு அனுமதி மறுத்து மிரட்டிய நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கக்கூடிய மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா என்ற கிரிக்கெட் வீரர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்ரல் 18) இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் TNSTCக்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகையுடன் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.
அப்போது அந்த பேருந்தின் நடத்துநரும் பகுதி நேர ஓட்டுநருமான ராஜா இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை எனக் கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அட்டை செல்லாது எனவும் கூறியுள்ளனர்.
அப்போது பதிலளித்த சச்சின் சிவா இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது எனக் கூறியபோது மாற்றுத்திறனாளி சிவாவை பார்த்து,
”முகத்தை உடைத்துவிடுவேன் எனக்கு எல்லாம் தெரியும்” எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் இது குறித்து கேட்டபோது அப்படித்தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துள்ளார்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த நடத்துநர் நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அலட்சியமாகப் பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்றாமல் அப்படியே விட்டு சென்றுள்ளார்.
மேலும் காவல்துறையினர் முன்பாகவே “நீ மதுரைக்கு வா பார்த்துக்கொள்ளலாம்” என கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்தார்.
இதனையடுத்து காலை 9 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தடைந்த பின்னர்,
நடத்துநர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி SETC மதுரை மண்டல விசாரணை அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதனையடுத்து போக்குவரத்துத் துறை சார்பில் நடத்துநரும் பகுதி நேர ஓட்டுநருமான ராஜாவை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய சச்சின் சிவா, தமிழகம் முழுவதிலும் இதே போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு இனி வரும் காலங்களில் இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தொடர்ச்சியாகப் புகார் மனு அளித்துள்ளேன்” என்றார்.
கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள்: தீர்மானம் நிறைவேற்றம்!
நொச்சிக்குப்பம் மீனவர்கள் விவகாரம்: பேரவையில் எழுந்த கோரிக்கைகள்!