compulsory retirement for dgp rajesh das

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு கட்டாய ஓய்வு ஏன்?

தமிழகம்

compulsory retirement for dgp rajesh das

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கட்டாய ஓய்வை அறிவித்து இன்று (டிசம்பர் 01) தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி பணியாற்றி வந்தார்.

ஆனால் டிரான்ஸ்பர், வழக்கு பதிவு, விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளில் டி.ஜி.பியாக இருந்த திரிபாதி ஐபிஎஸ் தனக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அவருக்கு போட்டியாக ’சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி’ என்ற புதிய  பதவியை உருவாக்கி ராஜேஸ்தாஸை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அவருக்கு டிஜிபிக்கு நிகரான அதிகாரங்களும் வழங்கப்பட்டது.

பெண் எஸ்.பி குற்றச்சாட்டு!

ராஜேஸ்தாஸ் சிறப்பு டிஜிபி ஆனதும் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டத்திற்கு ஆய்வுக்கு சென்று திரும்பும்போது, மரியாதை நிமித்தமாக மாவட்ட எல்லையில் நின்ற தன்னை ராஜேஸ்தாஸ் காரில் ஏற்றி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி ஒருவர் நேரடியாக தலைமை செயலகம் வந்து புகார் அளித்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராஜேஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மூன்று ஆண்டுகள் சிறை!

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் ராஜேஷ்தாஸ்  மீதான விசாரணை அரசு சார்பில் தீவிரப்படுத்தப்பட்டது.

விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,

ராஜேஸ்தாஸ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,500 அபராதமும் விதித்தது.

கடைசி நேரத்தில் ட்விஸ்ட்!

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை குறிப்பிட்டு ராஜேஷ்தாஸை குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி, கட்டாய ஓய்வில் அனுப்பும்படி  தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலர் அமுதா ஐஏஎஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதில் ஏதாவது உடன்பாடு இல்லை என்றால் ராஜேஷ் தாஸ் அரசிடம் முறையிடலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜேஷ்தாஸ், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்று முதல் ரூ.10-க்கு ஆவின் டிலைட் பால்!

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

compulsory retirement for dgp rajesh das

+1
0
+1
1
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *