பயிரிடப்பட்டுள்ள விலைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க என்எல்சி நிறுவனம் முன்வந்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவியில் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி நிர்வாகம் இன்று தொடங்கியுள்ளது.
30 க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இந்த பணிகள் நடந்து வருகிறது.
விளைந்து நிற்கும் பயிர்கள் அழிக்கப்படும் காட்சிகள் காலை முதலே சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இது தொடர்பாக இன்று (ஜூலை 26) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,” என்.எல்.சி நிறுவனம் நிலத்திற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுக்கப்பட்டுவிட்டது.
அந்த நிலம் விவசாயிகளிடமே இருந்ததுதான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம். என்.எல்.சி நிறுவனம் தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 800 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 1000 மெகா வாட் மின்சாரம் குறையும் என என்.எல்.சி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதமே விவசாயிகளை விளைநிலங்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதையும் மீறி விவசாயிகள் தற்போது நெல் பயிரிட்டு உள்ளனர்.
இருந்தாலும் இதையும் ஏற்றுக்கொண்டு பயிரிடப்பட்டுள்ள விலைப் பயிர்களுக்கும் இழப்பீடு கொடுப்பதற்கு தற்பொழுது என்.எல்.சி நிர்வாகம் முன்வந்துள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது 30 ஹெக்டேர் நிலம் உடனடியாக தேவைப்படுகிறது. அதில் தான் தற்பொழுது கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 74 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதி உயர் இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் 10 முறை இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. கூட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் அடிப்படையிலேயே தற்போது கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் : சபாநாயகர் ஏற்பு!
”போரில் ஈடுபட தயாராகுங்கள்”: மக்களுக்கு அழைப்பு விடுத்த ராஜ்நாத் சிங்
அதிமுக ஆட்சியில் நடந்த தவறு இது..