ஓலா, உபேர் போன்ற வாடகை கார்களின் செயலிகளில் நாம் புக் செய்யும் போது , ஆண்ட்ராய்டு போன் என்றால் குறைந்த கட்டணமும் , ஐபோன் என்றால் கூடுதல் கட்டணமும் காட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இது குறித்த தகவல் சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த தகவல் உண்மையா? என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகை சோதித்து பார்த்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இந்த தகவல் உண்மை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் வகையில் செயலியில் கட்டண முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி , மடிப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி போனிக்ஸ் மால் செல்ல ஆண்ட்ராய்ட் போனில் புக் செய்தால் ரூ.160 ரூபாயும் ஐ போன் என்றால் ரூ.260 கட்டணமும் காட்டியுள்ளது.
ஆவடியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஆன்ட்ராய்டில் ரூ.961 கட்டணம் காட்டியுள்ளது. ஐ போனில் ரூ.1,010 கட்டணமாக காட்டியுள்ளது. தி நகரில் இருந்து எக்மோருக்கு ஆன்ட்ராய்டில் ரூ.180 காட்டிய வேளையில் ஐபோனில் ரூ.344 கட்டணமாக காட்டியுள்ளது.
இது, வாடிக்கையாளர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உபேர் நிறுவனம் கூறுகையில், “பயணிகளின் செல்போன் அடிப்படையில் பயணக் கட்டணத்தை வாங்கும் திட்டம் எங்களிடத்தில் இல்லை. மதிப்பிடப்பட்ட நேரம், தூரம் மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வண்டியின் தேவைக்கான நேரம் போன்ற காரணிகளைக் கொண்டே கட்டணத்தை நிர்ணயிக்கிறோம்” என்று விளக்கம் அளித்துள்ளது. அதே வேளையில், ஓலா இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க முன் வரவில்லை.
இந்த செயலிகளை டவுன்லோட் செய்யும் போதே கொடுக்கும் தரவுகளை கொண்டு ஆப்களில் கட்டணம் வேறுபாடு நிகழ வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சென்னையை சேர்ந்த ஃபாஸ்ட்ராக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி அம்பிகாபதி கூறுகையில், “மெயின் சர்வர் வழியாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு ஏற்ற வகையில் கட்டணத்தை எளிதாக மாற்றி காட்ட முடியும். போன்களின் வகைக்கு ஏற்றபடி கட்டணங்களை மாற்றியமைப்பது வாடிக்கையாளர்களுடன் சிறு பிள்ளை போல விளையாடுவதுக்கு சமம்” என்கிறார்.
வாடகை கார் சர்வீஸ் நிறுவனங்கள் தாங்கள் வாங்கும் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
19 வயது பையன்பா… கோலி வேண்டுமென்றே மோதியதாக குற்றச்சாட்டு!
பாலியல் வன்கொடுமை… கைதானவர் திமுக உறுப்பினர் கிடையாது – ரகுபதி விளக்கம்!