ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் இன்று (அக்டோபர் 12) காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் கடலில் விழாமல் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்றதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ராமேஸ்வரத்திற்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில், இன்று காலை, ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்த தனியார் பேருந்தும் பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
குறிப்பாக தனியார் பேருந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி கடலுக்குள் விழும் நிலையில் நின்றது. இதனால் பதறிப்போன பயணிகள் பேருந்தில் இருந்து தங்களது உடைமைகளை எடுத்தும் எடுக்காமலும் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
இந்த விபத்தில், அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் கையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
தனியார் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
அவரை அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் பேருந்தில் ஏறி மீட்டனர்.
தொடர்ந்து பேருந்து கடலில் விழாமல் இருக்க கயிறு கட்டி இழுத்து நிறுத்தினர். இதனால் பேருந்துகள் கடலில் விழாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் போலீசார் காயமடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விபத்தின்காரணமாக, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலத்தில் பேருந்து ஒன்று தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு கடலுக்குள் விழுந்து 8 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
தலைமை நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் பரிந்துரை நிறுத்திவைப்பு : இது முதல் முறையல்ல!