கோவை மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து இன்று (அக்டோபர் 8) அதிகாலை தீப்பற்றி எரிந்ததால் பரப்பான சூழல் ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து நீலகிரிக்கு கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றுள்ளனர். இன்று அதிகாலை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாளையம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பின் சக்கரத்தில் தீப்பிடித்துள்ளது.
இதனை கண்ட பேருந்தின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சுற்றுலா பேருந்து ஓட்டுநரை எச்சரித்துள்ளனர். இதனால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு மாணவர்களை அவசர அவசரமாக கீழே இறக்கிவிட்டுள்ளார்.
மாணவர்களும் பதறிப்போய் கீழே இறங்கியுள்ளனர். இதனிடையே பேருந்து மல மலவென எரியத் தொடங்கிவிட்டது. இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் இந்த தீவிபத்தில் பேருந்தின் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்து சேதமானது. அதிகாலையில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்வாய்ப்பாகப் பேருந்து ஓட்டுநர் மற்றும் மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கடையத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்த அடுத்த ஒரே வாரத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் ஒரு சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
மோனிஷா
டெங்கு காய்ச்சலில் இருந்து மீள உதவுமா பாகற்காய்?
நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: கட்டணம் எவ்வளவு தெரியுமா?