காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி மாணவன் ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில். இவர் கல்லூரிக்கு அருகில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
நேற்று (அக்டோபர் 22) நள்ளிரவு 12 மணியளவில் நிகில் ஆன்லைனில் ஏற்கனவே ஆர்டர் செய்து வைத்திருந்த சோடியம் சல்பேட் விஷத்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அதே விடுதியில் தங்கி படித்து வரும் அவரது நண்பர் ஆதித்யா சவுத்ரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் விஷமருந்திவிட்டதாக நிகில் தெரிவித்துள்ளார்.
ஆதித்யா, நிகில் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நிகில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்து வந்த மறைமலை நகர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், மாணவன் தங்கியிருந்த விடுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மாணவன் ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் வாங்கி குடித்தது தெரியவந்தது. மாணவன் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
சிறுவனை கயிறாகப் பயன்படுத்தி ஸ்கிப்பிங்: அதிர்ச்சி வீடியோ!
ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து!