சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவியை கொலை செய்த இளைஞரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராமலட்சுமி. இவரது மகள் சத்யபிரியா(20). தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆதம்பாக்கம் ராஜா தெருவைச் சேர்ந்தவர் தயாளன். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மகன் சதீஷ்(23).
சத்யபிரியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கல்லூரி செல்வதற்காக வழக்கம்போல் இன்று(அக்டோபர் 13) பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியாவிடம் வந்து பேசியிருக்கிறார் சதீஷ்.
ஆனால் சத்யபிரியா அவரிடம் பேச மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் இருந்த சதீஷ், திடீரென்று பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யபிரியாவை பிடித்து தள்ளிவிட்டுள்ளார்.
நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்த சத்யாவின் தலை மீது ரயில் ஏறி இறங்கியது. இதில் சத்யபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சதீஷைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சதீஷின் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை, அவர்கள் வெளியூர் தப்பி செல்லாதபடி சதீஷின் புகைப்படத்தை வைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கலை.ரா
மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி: தொடங்கிவைத்த ஸ்டாலின்