திருச்சி சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் தன்னை படிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சிறுமிக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூரில் காவியா (7) என்ற சிறுமி தனது தாய் கவிதா மற்றும் சகோதரன் கவின்குமார் உடன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார்.
இந்நிலையில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தவும் கவிதா சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனிடையே திருச்சியில் இருக்கும் உறவினர் வீட்டில் கடந்த ஒரு வார காலமாக குழந்தைகளுடன் கவிதா தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 8 ஆம் தேதி இரவு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி சென்றார்.
அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுமி காவியா “ஸ்டாலின் அங்கிள், என்னை படிக்க வையுங்கள்” என்று சத்தமாக கோரிக்கை வைத்துள்ளார்.
இதனைக் கேட்ட முதல்வர் சிறுமியின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறுமியிடம் சென்று விசாரித்த போது,
தனது குடும்பம் வறுமையால் வாடுவதாகவும், இதனால் பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை எனவும் அந்த சிறுமி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் சிறுமியை படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து மறுநாள் (நேற்று) காலை கவிதாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது கவிதா, கணவரின் சொத்துக்கள் கூட்டுரிமையில் இருப்பதால் அவற்றை பெற இயலவில்லை. வேலை வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கோவை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பரிந்துரைத்துள்ளார்.
கணவரின் சொத்துக்களை இலவச சட்ட உதவி மையம் மூலம் மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும், தனியார் பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து கட்டணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
WTC Final: தோல்வி முகத்தில் இந்தியா… கோலியை கைகாட்டும் கங்குலி
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
சேலத்தில் 3 நாட்கள் முகாமிடும் முதல்வர் ஸ்டாலின்: பயண விபரம்!