பட்டியலின மக்களுக்காகக் கோவில் பூட்டை உடைத்த ஆட்சியர்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியலின மக்கள் இன்று கோயிலுக்குள் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தென் முடியனூரில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் சென்று கடவுளை வழிபடுவதற்கு சுமார் 80 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இதற்கான தீர்வு கிட்டாத நிலையில், இது தொடர்பாகப் பட்டியலின மக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அளித்த உத்தரவின் படி, உயரதிகாரிகள் முடியனூர் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதற்குச் சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் மாவட்ட ஆட்சியரே நேரடியாகக் களத்தில் இறங்கினார். இன்று (ஜனவரி 30) மாவட்ட ஆட்சியர் நேரடியாக முடியனூர் கிராமத்திற்கு வந்தார்.
அந்த கிராமத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த கோவிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார் மாவட்ட ஆட்சியர்.
இதுகுறித்து பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், ”தென் முடியனூர் முத்துமாரியம்மன் கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது.
அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களுக்கு யாராலும் உரிமை கோர முடியாது. கோயில்கள் என்பது அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானவைதான்.
இங்குப் பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறது.
அதனை மாவட்ட நிர்வாகம் நிச்சயம் செயல்படுத்தும். அதை இன்றைக்குச் செயல்படுத்தியுள்ளோம்” என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ததால் பட்டியலின மக்கள் அனைவரும் திருவிழா போல் பூ, பழம், மாலை எனப் பூஜைக்குத் தேவையான அனைத்தையும் பெரிய தட்டுகளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
இது குறித்துப் பேசிய பட்டியலின மக்கள், “கோவிலுக்குள் சென்றால் வெளியே போ நாயே என்று துரத்தி விடுவார்கள். ஆனால் இப்போது கோவிலுக்குள் சென்று வழிபடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
இதற்கு முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கை விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்களை அங்குள்ள கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
அதிமுக பொது செயலாளர் பதவி : சசிகலா கேவியட் மனு!
மாஜி அமைச்சருக்கு எதிராக அரசு மேல்முறையீடு!