திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எட்டே மாதங்களில் ரூ. 1161.74 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வருவாய் புதிய சாதனைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ. 1000 கோடி இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர்.
ஆனால் வெறும் 8 மாதங்களில் உண்டியல் வருவாய் ரூ.1161.74 கோடி கிடைத்துள்ளது. ஏழுமலையான் கோயில் உண்டியலில் 8 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 9 ஆவது மாதமாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. நவம்பர் மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.127.30 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம், இந்த நிதி ஆண்டில் உண்டியல் வருவாய் ரூ.1600 கோடியைத் தாண்டும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களில், அதிக பட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும் ரூ. 139.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு 1000 கோடி கிடைப்பதால் தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை (ஃபிக்சட் டெபாசிட்) ரூ.15,938 கோடிகளையும், மற்றும் தங்கம் கையிருப்பு 10,258 கிலோவைத் தாண்டியுள்ளது.
1950-ம் ஆண்டு வரை ஏழுமலையானுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது, ஆனால் 1958-ல் முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது.
1990 ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உண்டியல் வருவாய் வரத் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
உண்டியல் வருமானம் 2010 ஆண்டு அக்டோபர் 23 தேதி ஒரே நாளில் ரூ.3.6 கோடியும், 2011 ஆம் ஆண்டு நவம்பர் 1 தேதி ரூ.3.8 கோடியும், 2012 ஜனவரி 1-ஆம் தேதி ரூ. 4.23 கோடியும் கிடைத்தது.
2012 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.5.73 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி ரூ.6 கோடியைத் தாண்டியது.
2015-16-ம் உண்டியல் ஆண்டு வருவாய் ரூ.1,000 கோடியைத் தாண்டியது. 2019-20- நிதி ஆண்டில் ரூ.1,313 கோடியை எட்டியது.
கொரோனா பாதிப்பால் திருப்பதி உண்டியல் வருமானம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக குறைந்து, 2020-21ல் நிதி ஆண்டில் ரூ. 731 கோடியும், 2021-22ல் ரூ. 933 கோடியும் கிடைத்தது.
அடுத்த மாதம் வைகுண்ட ஏகாதசி வருவதால், உண்டியல் வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
மவுசு கூடிய மல்லிகைப்பூ: காரணம் தெரியுமா?
மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் அறிவித்த புதிய திட்டம்!