கோவையில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடையில் பெண் தவறி விழுந்ததையடுத்து ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி சார்பில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள 100 அடி சாலையின் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர் வாரும் பணி நடைபெற்றது. அப்போது, பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்து இருந்ததால் அவற்றை அகற்றிவிட்டு புதிய மூடிகள் பொறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை குழிகள் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜூன் 16ஆம் தேதி மாலை அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளம் பெண் திறந்து இருந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென உள்ளே விழுந்துள்ளார்.
இதனால், அந்த பெண்ணிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இளம் பெண் பாதாள குழிக்குள் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நேற்று (ஜூன் 17) இரவு அனைத்து பாதாள சாக்கடைகளுக்கும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மூடி பொருத்தப்பட்டது. மேலும், பெண் தவறி விழுந்தது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், காந்திபுரம் பகுதியில் உள்ள 100 அடி சாலையில் கழிவுகளை தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தும், இந்த சம்பவம் தொடர்பாக உதவி செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாநில அந்தஸ்தை இழந்து மாம்பழம் சின்னம் கோரும் பாமக
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை தேடும் நெல்லை SETC!