அனுமதியின்றி பாம்பினை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட அப்துல் ரஹ்மான், உமா மகேஸ்வரி ஆகிய இருவரையும் கோவை வனச்சரக வனத்துறையினர் இன்று (மே 28) கைது செய்துள்ளனர்.
கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட பெண்:
கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவலையடுத்து, புலியகுளம் பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகியோர் அங்கு சென்று அந்த சாரை பாம்பை பிடித்து கோவை வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக, “சாரை பாம்பை பிடித்தபோது அவை விஷமற்றவை. சாரை பாம்பால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை. பாம்புகள் விவசாயிகளின் நண்பன்” என்று பேசி விழிப்புணர்வு வீடியோவை சமூக வலைதளங்களில் அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மகேஸ்வரி வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இந்நிலையில், பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மகேஸ்வரி மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அனுமதியின்றி பாம்பினை பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கோவை வனச்சரக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இருவரும் கோவை வனச்சரக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதுத்தொடர்பாக பேசிய கோவை மாவட்ட வனத்துறை தரப்பில் கூறியதாவது, “சாரை பாம்பை அனுமதியின்றி பிடிக்கும் முயற்சியில் மற்றவர்கள் ஈடுபடக் கூடாது என்றும், நல்லெண்ண அடிப்படையில் இருவரும் செயல்பட்டதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலக பட்டினி தினம் : மூன்றரை லட்சம் பேருக்கு விஜய் கட்சி அன்னதானம்!