போராட்டம் தொடரும் என கோவை தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணைப்படி கூலி வழங்க வேண்டும்,
போன்ற 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் இன்று (அக்டோபர் 3) காலை முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் 250க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து மற்ற தூய்மைப் பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என போராட்டத்தினை வழிநடத்திய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் 18 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. இதை, எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கும்படி தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் சார்பில் ஆட்சியர் உட்பட அலுவலர்களிடம் கேட்கப்பட்டது.
உயர் அலுவலர்களுடன் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வமாக அரசு தரப்பில் இருந்து தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்.
இல்லையெனில் நாளையும் (அக்டோபர் 4) தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள் இன்று கலைந்து சென்றனர்.
ஜெ.பிரகாஷ்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: தமிழக அரசு புதிய அறிவிப்பு!
பிரசாந்த் கிஷோர் நடைப்பயணம் வெற்றிபெறுமா?