வைரலாகும் பொதுக் கழிப்பறை: கோவை மாநகராட்சி விளக்கம்!
கோவை அம்மன்குளத்தில் இருவர் பயன்படுத்தும் வகையில் உள்ள பொதுக் கழிப்பறை குறித்து கோவை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
கோவை மாநகராட்சி, 70வது வார்டு அம்மன்குளம், ராஜிவ் நகரில் ஒரே அறையில் இருவர் பயன்படுத்தும் வகையில் உள்ள பொது கழிப்பறை குறித்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த கழிவறைக்கு கதவுகளும் இல்லாததால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று (செப்டம்பர் 8) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”கோவை மாநகராட்சி அம்மன்குளம் பகுதியில் ஒரே அறையில் 2 பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
இந்தக் கழிப்பறைக்கு கதவும் இல்லை. பொதுமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏற்கத்தக்கதல்ல” எனப் பதிவிட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதுதொடர்பாக கோவை மாநகராட்சி விளக்கம் அளித்தது.
அதில், ”சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் இதில் கதவுகள் பொருத்தப்படவில்லை.
இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவற்றை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்’ அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: விக்ரம் வெற்றியை கட்சிக்கு பயன்படுத்தலாமா? கமல் பதில்!