கோவை மாவட்டம் சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள பாஜக பிரமுகர் லெட்சுமணனுக்கு சொந்தமான மாருதி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பொள்ளாச்சி பாஜக நிர்வாகிகள் வீடுகள் மீது நேற்று (செப்டம்பர் 22 ) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ்,மற்றும் இந்து முன்னணி அமைப்பைச்சேர்ந்த சரவணன் ,சிவா ஆகியோரது வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட அதிவிரைவு படையினர் இன்று (செப்டம்பர் 23 ) கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மேலும், கோவை மாநகரில் உள்ள பள்ளிவாசல்கள், இந்து முன்னணி அலுவலகம், பா. ஜ. க அலுவலகம் உள்பட முக்கிய அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகர் முழுவதும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபடுகிறது, இது தவிர சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உயர்கல்வி தொடராத மாணவர்கள்: நடவடிக்கை எடுத்த கல்வித்துறை!
சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி வெளியீடு!