கோவையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சத்தியப்பாண்டி என்ற நபர் அரிவாளால் வெட்டப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியான ரவுடி சஞ்சய் ராஜா, கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமடம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று (மார்ச் 7) காலை காவல்துறையினர் சஞ்சய் ராஜாவை துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது காவல்துறையினரை நோக்கி சஞ்சய் ராஜா துப்பாக்கியால் சுட முயன்றிருக்கிறார்.
போலீசார் தங்களை தற்காத்து கொள்வதற்காக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் துப்பாக்கியால் சஞ்சய் ராஜா இடது காலில் சுட்டார்.
காயமடைந்த அவர் கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் காவல்துறை விசாரணையிலிருந்த நபர் போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்