அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த தங்கநிற புலியின் புகைப்படம், இயற்கை ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஜனவரி 24-ஆம் தேதி அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் மிகவும் அரிதாக தென்படும் தங்கநிற புலியை கோயம்புத்தூரைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கௌரவ் ராம்நாராயணன் படம்பிடித்துள்ளார். தி வைல்ட்சைட் என்ற டிராவல் போட்டோகிராபி நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு ராம்நாராயணன் அளித்த பேட்டியில்,
“ஜனவரி 24-ஆம் தேதி மாலை 3.30 – 4 மணியளவில் காசிரங்கா பூங்காவில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகளை சஃபாரிக்கு அழைத்து சென்றேன். அப்போது தங்கநிற புலி கண்ணில் பட்டது.
ஆரம்பத்தில் அது சுமார் 800 மீட்டர் தொலைவில் இருந்தது. பின்னர் அந்த புலியானது சஃபாரி வாகனத்தை நோக்கி, சுமார் 80 மீட்டர் தொலைவில் வந்தபோது புகைப்படம் எடுத்தேன்.
அந்த தருணம் மிகவும் உற்சாகமாக இருந்தது. இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நிகழாது என்று நினைக்கிறேன்.
முன்னதாக தங்கநிற புலிகளை படம்பிடித்த போது ஒன்று தொலைவான தூரத்திலோ அல்லது மோசமான வெளிச்சத்திலோ படம் பிடிக்கப்பட்டது. தங்கநிற புலிகள் பற்றிய தரமான ஆவணப் படங்கள் எதுவும் இல்லை. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட படம் மிகவும் தெளிவாக உள்ளது” என்று தெரிவித்தார்.
தங்கநிற புலிகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வரும் பெங்களூருவின் தேசிய உயிரியல் அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் உமா ராமகிருஷ்ணன், கூறும்போது, “அடிப்படையில் கருப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் புலிகள் உள்ளன.
தங்கநிற புலியை பொறுத்தவரை, மரபணுவில் ஏற்பட்ட பிறழ்வு மாறுபாடு காரணமாக, கருப்பு நிறம் இல்லாமலும் ஆரஞ்சு நிறம் லேசாக மங்கலானதாலும் பொன்னிறமாகத் தெரிகிறது,
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதுபோன்ற பிறழ்வை அடையாளம் கண்டுள்ளன. தற்போது காசிரங்காவில் உள்ள காடுகளில் உள்ள புலிகளில் இந்த பிறழ்வு உள்ளதா? என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல காசிரங்காவில் தங்கநிற புலி கேமராவில் படம்பிடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை கேமராவில் சிக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாபி தியோலின் டெரர் லுக்… வைரலாகும் கங்குவா போஸ்டர்!
கடலூர்: விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் விபத்து.. 3 பேர் பலி!