மீண்டும் 97, 98 வந்துவிடக் கூடாது: கோவையில் கவனம் குவிக்கும் போலீஸ்!

தமிழகம்

கோவையில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் அந்த மாநகரத்தின் உளவுத்துறை உதவி ஆணையராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார், அதிவிரைவு படையினர் என சுமார் 4000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து அதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையருடன், மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று (செப்டம்பர் 24) ஆலோசனை நடத்தினார்.

இதேபோன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், இஸ்லாமிய அமைப்பினருடனும் ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டு, அவருக்கு பதில், பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று சிங்காநல்லூர் துணை ஆணையர் அருண், சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கோவையில் கடந்த 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது மிகப்பெரிய கலவரமாக மாறியது. செல்வராஜ் கொலையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டதால் இஸ்லாமிய கடைகள் சூறையாடப்பட்டன.

பதிலுக்கு இஸ்லாமியர்களும் தாக்குதல் நடத்தினர். 18 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1998 ஆம் கோவையில் 11 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 58 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் தற்போது மீண்டும் கோவையில் வன்முறைகளின் அறிகுறிகளாக சிறு சிறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க முன்கூட்டியே அரசும், காவல்துறையும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்கிறார்கள் போலீஸ் தரப்பில். கோவை ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள் என பொது இடங்கள் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன.

கலை.ரா

“வனங்களை, நீர்நிலைகளை மீட்டெடுக்கவேண்டும்”– முதல்வர்

மதுரை எய்ம்ஸ்! உண்மை நிலை என்ன? மக்கள் நீதி மய்யம் கேள்வி

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *