கோவை ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜனவரி 29) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்(வயது 22). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணைக் காதலித்தார்.
இதற்கு இருதரப்பு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். தம்பியின் இந்த காதலை விரும்பாத உடன்பிறந்த அண்ணன் வினோத் குமார், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து 2019 ஆம் ஆண்டு இருவரையும் வெட்டி ஆணவ படுகொலை செய்தார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் வினோத்குமார் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில், ஐயப்பன், கந்தவேலு, சின்ராஜ் உள்ளிட்டவர்கள் வழக்கில் தொடர்புடையவர்களாக போலீசார் கைது செய்தனர்.
மூவர் விடுதலை!
இந்த வழக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த 23ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி விவேகானந்தன், ஆணவக் கொலை வழக்கில் குற்றங்களுக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஐயப்பன், கந்தவேலு, சின்ராஜ் ஆகிய 3 பேரை விடுதலை செய்தார்.
அதேவேளையில், வினோத்குமாரை குற்றவாளி என அறிவித்த அவர், மரண தண்டனை வரை கொடுக்கும் அளவுக்கு அவர் குற்றம் செய்துள்ளார் என்றும், தண்டனை விவரங்கள் 29ம் தேதிக்கு வழங்கப்படும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
வழக்கறிஞர்கள் வாதம்!
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, “இது அரிதிலும் அரிதான வழக்கு இல்லை திட்டமிட்டு நடக்கவில்லை. வினோத் குமார் தனது தம்பி கனகராஜை தாக்கும்போது, தடுக்க வந்த வர்ஷினி பிரியாவை எதிர்பாராத விதமாகவே தாக்கியுள்ளார்.
வர்ஷினி பிரியாவை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்பதால் இதை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. வினோத் குமாருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் சசிகுமார் வாதிட்டார்.
அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் பா.மோகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், “தனது உடன்பிறந்த சகோதரரையே பட்டியலின சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததற்காகப் படுகொலை செய்தது, சாதிய வன்மத்தை வெளிக்காட்டுவதாகக் குறிப்பிட்டு வினோத்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.
கடந்த 75 வருட சுதந்திர இந்தியாவில் இன்றளவும் சாதிய வன்கொடுமை இருக்கும் நிலையில், இரட்டைப் படுகொலை செய்த குற்றவாளி வினோத் குமாருக்கு, இறுதி மூச்சு வரை எந்தச் சலுகையும் இன்றி சிறை தண்டனை எனத் தீர்ப்பு வழங்க வேண்டும். இனி வன்கொடுமை நடைபெறாத வண்ணம் இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமைய வேண்டும்” என்று அவர் வாதிட்டார்.
சாகும் வரை தூக்குத்தண்டனை!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விவேகானந்தன், ‘சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலையை, அரிதினும் அரிதான வழக்காக கருதி இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், குற்றவாளி வினோத்குமாருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் பா.மோகன் பேசுகையில், “இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் வினோத்குமார் திட்டமிட்டே கொடிய ஆயுதத்துடன் அத்துமீறி வீட்டிற்குள்ளே சென்று, சாதியைக் குறிப்பிட்டுக் கடுமையாகப் பேசி கொடூரமாகத் தாக்கி கொன்றுள்ளார், தடுக்க வந்த வர்ஷினி பிரியாவையும், சாதியைச் சொல்லி தாக்கிக் கொலை செய்தார்.
இந்த வழக்கில் சதி என்பது நிருபிக்கப்படாத நிலையில், மூவர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் அத்துமீறி நுழைதல் (பிரிவு 448), கொடிய ஆயுதங்களுடன் தாக்குதல் (பிரிவு 302) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ( பிரிவு 325) ஆகிய பிரிவுகளின் கீழ் சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.