கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரத்தில் குழாய்கள் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தின் உரிமையை, இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது.
இதன்படி கோவை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய்கள் மூலமாக காஸ் விநியோகிக்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து கோவை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதிக்கப்பட்டன.
இந்நிலையில் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தது. அப்போது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டது.
இந்த ஆய்வு பணியின் போது எதிர்பாராத விதமாக குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த வெடிப்பின் காரணமாக அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது.
தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த காட்சியில் எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் பொழுது அப்பகுதி மக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சியும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நூலிழையில் உயிர் தப்பியதும் பதிவாகியுள்ளன.
- க.சீனிவாசன்
கால்டாக்சி… ஆட்டோ… அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள்: பெண்களுக்கு பாதுகாப்பானதா சென்னை?