கோவையில் கார் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொட்டாசியம் நைட்ரேட் ஆன்லைனில் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் போலீசார் தகவல்களை கேட்டுள்ளனர்.
கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் வெடித்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
உயிரிழந்த ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்ட நிலையில் அது எப்படி கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை ஜமேஷா முபீன் ஆன்லைனில் வாங்கியதாகத் தெரிகிறது.
எனவே பிரபல இ-காமர்ஸ் இணையதளங்களான அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில் வெடிப்பொருட்களை வாங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் வெடிபொருட்களை அவர் வாங்கியுள்ளார்.
வெடிபொருள் மூலப்பொருட்களை விசாரிக்கும் சிறப்புக் குழு, கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவை மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில்,
யார் யாரெல்லாம் பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் சல்பர் உள்ளிட்ட வேதிப்பொருட்களை வாங்கினார்கள் என்று கேட்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அப்படி வாங்கியவர்களின் பெயர் மற்றும் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட அடையாள விவரம், பணம் செலுத்திய முறை, எவ்வளவு வேதிப்பொருட்கள் விற்கப்பட்டது போன்ற தகவல்களை அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் கேட்டிருக்கின்றனர்.
இதேபோன்று தீவிரவாத வழக்கில் என்.ஐ.ஏ வால் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷீத் அலி மற்றும் அசாருதீன் ஆகியோருடன் ஜமேஷா முபீனும், அவரது கூட்டாளிகளும் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே இந்த வேதிப்பொருட்களை கேரளாவில் இருந்து வாங்கும் வாய்ப்பும் உள்ளதாக போலீஸ் சந்தேகிக்கின்றனர்.
அவர்களை ஜமேஷாவும் அவரது கூட்டாளிகளும் சிறைக்கு சென்று பார்த்தார்களா என்பதை விசாரிக்குமாறு கேரள போலீசாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜமேஷா முபீனுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான முறையான பயிற்சி இல்லை என்றும் சில யூடியூப் வீடியோக்கள் மற்றும் இணையதளங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்கள் ரசாயன கலப்பில் ஈடுபட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கலை.ரா