கோவை கார் சிலிண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் 6 பேருக்கும் டிசம்பர் 13 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில், காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
6 பேர் கைது
அவரது வீட்டில் வெடி பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், வயர்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்பத்தில், இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் 6 பேரும் கடந்த நவம்பர் 8ஆம் தேதி, சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி இளவழகன், அவர்களை நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு நவம்பர் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
காவல் நீட்டிப்பு
அப்போது, அவர்களின் பாதுகாப்பு காரணமாகவும் அழைத்து வருவதில் ஏற்படும் நேரம் அதிகரிப்பது காரணமாகவும் கோவை சிறையில் இருந்து அந்த 6 பேரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் 6 பேருக்கும் மீண்டும் டிசம்பர் 6 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், அந்த 6 பேருக்கும் நேற்றுடன் (டிசம்பர் 6) நீதிமன்ற காவல் முடிவடைந்தது.
இதையடுத்து, அவர்கள் நேற்று மீண்டும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிபதி முன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரணை செய்த நீதிபதி, 6 பேருக்கும் டிசம்பர் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.
ஜெ.பிரகாஷ்
நெய்வேலி என்எல்சி விவகாரம்: களத்தில் போராடவும் தயார் – அன்புமணி
டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி 75 இடங்களில் வெற்றி!