கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் இன்று காணொலி மூலம் ஆஜர் படுத்தப்பட இருக்கின்றனர்.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, கோவை, திருப்பூர் என தமிழகத்தின் 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், கோவையில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைதான 6 பேரும் கோவை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு சென்னை பூவிருந்தமல்லி என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு) சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 6 பேரையும் என்.ஐ.ஏ. நீதிபதி முன்பு இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
அவ்வை நடராஜன் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி!
ஆறு பேர் விடுதலை: காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனுத்தாக்கல்?