கோவை சிலிண்டர் விபத்து குறித்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நான்கு பேர் வீடுகளில் திருவாரூர் மாவட்ட போலீசார் இன்று (அக்டோபர் 29) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி ஜமேஷா முபின் என்ற நபர் காரில் பயணித்த போது சிலிண்டர் வெடித்து உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா மற்றும் முகமது அசாருதீன், ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கானது என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் ஜமேஷா முபின் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நெல்லை மாநகர போலீசார் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த மதகுரு முகமது உசைன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அசாரூதின், சார்ஜீத், ரிஸ்வான், இன்டியாஸ் உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
நான்கு பேரும் என்.ஐ.ஏ போலீசார் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்கள் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கோவை சிலிண்டர் விபத்து குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சோதனையில், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றிய செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
செல்வம்
முதல்வருக்கு என்னாச்சு? ஹெல்த் ரிப்போர்ட்!