கோவை கார் வெடிப்பு: தலைமைச் செயலாளருடன் டிஜிபி ஆலோசனை!
கோவையில் கார் வெடித்தது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார்.
ஜமேஷா முபீனின் வீட்டில் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 5 பேரை கைது செய்தனர்.
மேலும் ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து சில துருப்புச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஜ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தநிலையில், சென்னையில் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு உடன் டிஜிபி சைலேந்திர பாபு, உள்துறைச் செயலர் பணீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டிருந்த டிஜிபி சைலேந்திரபாபுவும், ஏடிஜிபி டேவிட்சனும் சில முக்கிய ஆவணங்களுடன், தலைமைச் செயலாளரை இன்று(அக்டோபர் 26) சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது எப்படி, முக்கிய கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று மாலை முதல்வருடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திலோ அல்லது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்திலோ முதல்வரை டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் சந்திப்பர் என்று கூறப்படுகிறது.
கலை.ரா
எடப்பாடி பசும்பொன் செல்லவில்லை!
காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் கார்கே