கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் வரும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.
அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமதுநவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை நவம்பர் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதனிடையே அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட 6 பேருக்கும் இன்றுடன் காவல் முடிவடையும் நிலையில், இன்று காலை காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு வரும் டிசம்பர் 6ஆம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரியா
தமிழகத்தின் பல்லுயிர் பாரம்பரியப் பகுதி அரிட்டாபட்டி
FIFA WorldCup 2022: மெஸ்ஸிக்கு சாதனை… அர்ஜென்டினாவுக்கு வேதனை!