கோவையில் கார் வெடித்தது தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் பயணித்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்த இடத்தில் ஆணி மற்றும் கோலி குண்டுகள் சிதறி கிடந்தன.
6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. உயிரிழந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேசா முபீன் வீட்டில் போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் சனிக்கிழமை இரவு ஜமேசா வீட்டில் இருந்து அவர் உள்பட 5 பேர் மர்ம பொருள்களை தூக்கிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகின.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் ( 23), முகமது ரியாஸ் (27), ஃபைரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை போலீஸ் கைது செய்தனர். வழக்கில் திடீர் திருப்பமாக ஆறாவதாக அஃப்சர் கான் என்பவரை போலீஸ் கைது செய்தது. இவர் இறந்துபோன முபீனின் உறவினர் என்பது தெரியவந்தது.
இந்த கார் வெடிப்பு தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. முபீனின் வீட்டில் கோவையின் முக்கிய இடங்கள் குறித்த துருப்புச்சீட்டுகளும் இருந்ததால் தீவிரவாத சதித்திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகளும் கோவைக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். என்.ஐ.ஏ டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வழக்கின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேற்று (அக்டோபர் 26)பரிந்துரை செய்திருந்தார். ஆனாலும் அதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி அவசியம்.
இந்தநிலையில் இன்று(அக்டோபர் 27) கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப்பிரிவு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கலை.ரா
சென்னை சிறுவன் கடத்தல்: சமயோசிதமாக தப்பித்தது எப்படி?
பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்: ஜாக்கிரதை தமிழ்நாடு!