கோவை சிலிண்டர் விபத்தில் கைது செய்யப்பட்ட நவாஸ் இஸ்மாயில், ஃபெரோஸ் இஸ்மாயில், ரியாஸ், முகமது தல்கா ஆகியோரது தாயார், ”தங்களது மகன்கள் அப்பாவிகள் என்றும் ஜமேஷா முபின் வீட்டை காலி செய்ய உதவி கேட்டதாலேயே அவர்கள் ஜமேஷா முபின் வீட்டிற்குச் சென்றனர்” என ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் பயணித்தபோது சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில், போலீசார் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட முகமது நவாஸ் இஸ்மாயில், ஃபெரோஸ் இஸ்மாயில் சகோதரர்களின் தாயார் மைமுனா பேகம் சம்பவம் குறித்து கூறும்போது,
“அக்டோபர் 22-ஆம் தேதி முபின் மதியம் 2 மணியளவில் எங்கள் வீட்டிற்கு வந்தார். ’தனக்கு இதய நோய் இருப்பதால், கனமான பொருட்களை தூக்க முடியாது.
வீட்டை காலி செய்ய உதவ முடியுமா’ என்று எனது மகன் ஃபெரோஸிடம், ஜமேஷா முபின் கேட்டார்.
’இரவில் அவர்களை அனுப்புகிறேன்’ என நான் ஜமேஷா முபினிடம் தெரிவித்தேன். ஃபெரோஸ் இரவு 10 மணியளவில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பியபோது, அவனுக்கு உதவியாக எனது மற்றொரு மகன் நவாஸை உடன் அனுப்பினேன்.
அவர்களின் நெருங்கிய நண்பன் முகமது ரியாஸையும் உதவிக்காக அவர்களுடன் அழைத்துச் செல்லும்படி கூறினேன்.
11.45 மணியளவில் எனது மகன்கள் இருவரும் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். காலையில் என்னுடைய மகன்கள் இந்த செய்தியை பார்த்தபோது வெடித்த கார் முபினுக்கு சொந்தமானதுபோல் இருப்பதாக என்னிடம் கூறினார்கள்.
உடனடியாக நான் 2016-ல் நவாஸை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமையில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு, முந்தைய இரவு நடந்த சம்பவங்கள் குறித்து அவரிடம் தெரிவித்தேன்.
இன்ஸ்பெக்டர் புறவழிச்சாலைக்கு வந்து என்னுடைய மகன்களிடம் முபினின் வீட்டை காட்டும்படி கேட்டார். அவர்கள் இன்ஸ்பெக்டருக்கு முபினின் வீட்டைக் காட்டினார்கள்.
பின்னர் அக்டோபர் 25-ஆம் தேதி பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு எனது மகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்” என்றார்.
ஜி.எம்.நகர்ப் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் தாயார் ஜுனைதா பேகம், “ஃபெரோஸ் எனது மகனை முபின் வீட்டை காலி செய்ய உதவி தேவைப்படுவதாக கூறி, அழைத்துச் சென்றான். இரவு 10.15 மணியளவில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பிய அவன், 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்துவிட்டான்.
இதற்கிடையில் நான் அவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவதாக தெரிவித்தான். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த அவனுடைய சொற்ப வருமானத்தில்தான் எங்களுடைய மொத்த குடும்பத்தையும் கவனித்து வந்தான்” என்றார்.
கைது செய்யப்பட்ட உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா தாயார் ஹஸ்வத் பிவி, “என்னுடைய மகன் அப்பாவி. குண்டு வெடித்த காரை முபினுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் தல்கா என்று போலீசார் தெரிவித்ததுள்ளனர்.
எனது மகன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த காரை முபினுக்கு விற்று விட்டார். முபின் முதல் தவணையாக ரூ.16,000 செலுத்தி காரை வாங்கினார். நீண்ட நாட்கள் கழித்து மீதமுள்ள ரூ.10,000 செலுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
அனிருத் கேட்ட சம்பளம்: ஷாக் ஆன லைகா நிறுவனம்!
தொடரும் மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?