கோவை பிரியாணி போட்டி : ஹோட்டல் மேலாளர் மீது வழக்கு!

தமிழகம்

கோவை ரயில் நிலையம் அருகே, ரயில் பெட்டி வடிவிலான போச்சோ ஃபுட் எக்ஸ்பிரஸ் ஹோட்டல் அமைந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பாபி நிறுவன குழுமங்களின் கீழ் செயல்படும் இந்த ஹோட்டல் வினோத போட்டி ஒன்றை அறிவித்தது.

அதன்படி அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், 4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50,000 ரூபாயும், 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தகவல் கோவை மற்றும் கேரள எல்லையோர பகுதிகளில் தீயாய் பரவியது.
இதனால் கேரளம் மற்றும் கோவை சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து பலர் நேற்று இந்த ஹோட்டலில் குவிய தொடங்கினர்.

இதையடுத்து நடைபெற்ற போட்டியில், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பிரியாணியை ஒரு பிடி பிடித்தனர். ஆனால் பெரும்பாலானோர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிரியாணியை சாப்பிட முடியாமல் திணறினர்.

இந்த போட்டி நடந்துகொண்டிருந்த போதே இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் பாபி செம்மனூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த ரெஸ்டாரண்டை தொடங்கியிருக்கிறோம். ஒரு ஜாலிக்காக இந்த போட்டியை நடத்தினோம். போட்டியில் கலந்து கொள்ள 400 பேர் புக் செய்து இருக்கின்றனர். ஆயிரம் பிரியாணி தயாராக இருக்கிறது. வேண்டுமென்றால் கூடுதலாகவும் சமைக்க உள்ளோம். எங்கள் சூப்பர்வைசர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். உணவு எதுவும் வீணாகாது. ஆம்புலன்ஸ் கூட ரெடியாக நிறுத்தி வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.

நேற்று நடைபெற்ற இந்த பிரியாணி போட்டியில் யாராலும் இலக்கை எட்ட முடியவில்லை. எனினும் அதிக பிரியாணி சாப்பிட்ட மூன்று பேருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் 3 பிரியாணி சாப்பிட்டு பரிசு தொகையை பெற்றார்.

அதுபோன்று கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த கணேஷ் குமார் இரண்டரை பிளேட் பிரியாணி சாப்பிட்டு இரண்டாம் பரிசும் மற்றொருவர் இரண்டு பிளேட் பிரியாணி சாப்பிட்டு மூன்றாம் பரிசு பெற்றனர்.

இதில், 50,000 ரூபாய் பரிசு பெற்ற இரண்டாம் இடத்தை பிடித்த கணேஷ் கமார் தனது மகனுக்காக இந்த போட்டியில் கலந்து கொண்டதாக உருக்கமாக கூறினார்.

“எனது சொந்த ஊர் தூத்துக்குடி. எனது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. அவனது சிகிச்சைக்காக கோவை வந்து தங்கியுள்ளோம். கோவையில் டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றி வருகிறேன். மகனின் சிகிச்சை செலவுக்காக இரவு பகல் பாராமல் வேலை செய்கிறேன். இந்த நிலையில் தான் பிரியாணி போட்டி குறித்து தெரிய வந்தது. எப்படியும் பரிசு வென்றிட வேண்டுமென்ற நோக்கில் வந்தேன். அதன்படி 50,000 ரூபாய் வாங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இப்படி பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் பிரியாணி போட்டி நேற்று நடந்து முடிந்த நிலையில் இந்த போட்டியை எந்தவிதமான முன் அனுமதியும் இன்றி நடத்தி பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றை இணைக்கக்கூடிய முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக பந்தய சாலை காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு போட்டியில்  கலந்து கொண்ட சிலரது வாகனங்களுக்கும், ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்ததாக கூறி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : ESIC -ல் பணி!

பியூட்டி டிப்ஸ்: எந்த நேரத்தில் வொர்க் அவுட் செய்வது நல்லது?

+1
2
+1
6
+1
0
+1
2
+1
1
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *