கோவை: தாயை பிரிந்த குட்டியானை முதுமலை முகாமில் சேர்ப்பு!
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை இன்று (ஜூன் 10) முதுமலை யானைகள் முகாமில் சேர்க்கப்பட்டு வனத்துறையினரால் பராமரிக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் மருதமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் காட்டு யானைக்கு வனத்துறையினர் சார்பில் சிகிச்சை வழங்கப்பட்டது.
சிகிச்சையின் போது குட்டியானை தாயிடமிருந்து பிரிந்து மற்ற கூட்டத்துடன் இருந்தது. 4 நாட்கள் தொடர்ந்து தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து தாய் யானை காட்டிற்குள் சென்றது.
வேறோரு கூட்டத்துடன் இருந்த குட்டி யானையை மீட்டு தாய் யானையுடன் சேர்க்கும் பணியில் கோவை வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். 2 குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் தாய் யானையுடன் குட்டி யானையை இணைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.
4 நாட்களுக்கும் மேலாக முயற்சித்தும் தாய் யானையுடன் குட்டி யானையை இணைக்க முடியவில்லை. எனவே வனத்துறையினர், குட்டி யானையின் உடல் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் அதை வைத்து பராமரிக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து, தாயை பிரிந்த குட்டி யானை இன்றுகோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் இருந்து வாகனத்தின் மூலம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு குட்டி யானைகள் பராமரிக்கும் கரால் கூண்டில் அடைக்கப்பட்டது.
பின்னர், வனக் கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் மூலம் குட்டியானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், குட்டி யானையை பராமரிக்க பழங்குடியின பாகன்களை நியமித்து, அதற்கு தேவையான பால் மற்றும் லாக்டோஜன் உள்ளிட்டவை வழங்கி அதை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி புதிய சாதனை!
துப்பாக்கி ரீ-ரிலீஸ்: வைரலாகும் விஜய்யின் வாழைப்பழ காமெடி வீடியோ!