கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியின் முதல் சுற்றில் சென்னை வருமான வரி அணி வெற்றி பெற்றுள்ளது.
கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
கோவையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் கூடைப்பந்து மைதானம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நேற்று (ஜூன் 5) தொடங்கியது.
இதில் ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரி அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி, லக்னோ உத்தரப்பிரதேச காவல்துறை அணி, புதுடெல்லி மத்திய செயலக அணி, சென்னை லயோலா அணி, திருவனந்தபுரம் கேரள மாநில மின்சார வாரிய அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உள்ளிட்ட 8 அணிகள் போட்டியிடுகின்றன.
அதேபோல், பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரிய அணி, மும்பை மத்திய ரயில்வே அணி, மும்பை மேற்கு ரயில்வே அணி, சென்னை தென்னக ரயில்வே அணி, சென்னை ரைசிங் ஸ்டார் அணி, கொல்கத்தா கிழக்கு இந்திய அணி, செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்றுள்ளன.
சென்னை வருமான வரி அணி வெற்றி
முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற தொடக்க போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரி அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகளும் மோதின.
தொடக்கம் முதலே ஆதிக்கத்தை செலுத்திய சென்னை வருமான வரி அணி வீரர்கள் 88-75 என்ற புள்ளிக் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
2வது போட்டியில் புதுடெல்லி மத்திய செயலக அணியை எதிர்த்து விளையாடிய கேரளா மாநில மின்சார வாரிய அணி வீரர்கள் 64-55 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றனர்.
கேரள மின்சார வாரிய அணி வெற்றி
சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான முதல் போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கோடைப்பந்து கழக அணி விளையாடியது. இந்த போட்டியில் 99-42 என்ற புள்ளி கணக்கில் கேரள மின்சார வாரிய அணி அபார வெற்றி பெற்றனர்.
2வது ஆட்டத்தில், கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணியை எதிா்த்து சென்னை ரைசிங் ஸ்டாா் அணி விளையாடியது. இதில் 81 – 71 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி வெற்றி பெற்றது.
நாளை வரை லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஜூன் 8ஆம் தேதி அரை இறுதி போட்டிகளும், ஜூன் 9ஆம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…