கோவை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவை விமான நிலையத்தில் சர்வதேச முனையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில், 11 ஆயிரத்து, 364 பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தினர்.
கோவையிலிருந்து தினமும் சென்னைக்கு 10, மும்பைக்கு 6 விமானங்கள் ஒரே நகருக்கு அதிகபட்சமாக இயக்கப்படுகின்றன. அடுத்ததாக ஐதராபாத், பெங்களூருக்கு தலா 5, டில்லிக்கு 4, புனே மற்றும் கோவாவுக்கு தலா ஒன்று என பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் மொத்தம் 32 உள்ளூர் விமானங்கள் அங்கு இயங்குகின்றன. இவற்றில் வருகை மற்றும் புறப்பாடு இரண்டுக்கும் சேர்த்து, மொத்தம், 11 ஆயிரத்து, 364 சீட்கள் உள்ளன.
இதுதவிர, கொழும்பு, சிங்கப்பூ, ஷார்ஜா, மாலே போன்ற நகரங்களுக்கு சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரு சிறிய சர்வதேச முனையத்தை கோவை விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அதோடு, கோவையில் பசுமை விமான நிலையம் நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும். சேலம் அல்லது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டு மெட்ரோ ரயிலுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது, அமைந்துள்ள விமான நிலையத்தில் அகலமான பாடி கொண்ட விமானங்களை இயக்க முடிவதில்லை. இப்போதே, சென்னையில் பரனூர் விமான நிலையம் அமைக்க முயற்சிப்பது போல கோவையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்