கோவை வனப்பகுதியில் சுருண்டு விழுந்த தாய் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் வனப் பணியாளர்கள் நேற்று (மே 30) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, யானை பிளிரும் சத்தம் கேட்டது. இதையடுத்து, சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருந்தது.
பெண் யானை நடக்க முடியாமல் உடல்நலம் பாதித்த நிலையில் கீழே விழுந்து கிடந்தது. அந்த தாய் யானையை குட்டி யானை எழுப்ப முயற்சி செய்து கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
உடனே, மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், கோவை ரேஞ்சர் திருமுருகன், வன கால்நடை மருத்துவர்கள் சுகுமார், ராஜேஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மருத்துவர்களின் முதற்கட்ட ஆய்வில் தாய் யானைக்கு வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து, யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து வாழைப்பழம் உள்ளிட்டவை யானைக்கு உணவாக அளிக்கப்பட்டது. இதனை யானை உட்கொண்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மருத்துவர்கள் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கும்போது அதன் மூன்று மாத குட்டி யானை, தாயை பிரியாமல் அங்கேயே இருந்தது.
தாய் யானையின் மீது அமர்ந்தும், அதனை முட்டி தள்ளியும் எழுப்ப முயன்றது. குட்டியானையின் இந்த பாசப் போராட்டம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.
இதுகுறித்து பேசிய மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியன், “உடல்நலம் பாதித்த பெண் யானைக்கு 40 வயது இருக்கும். அதனுடன் உள்ள குட்டி யானை பிறந்து 3 மாதம் இருக்கும். யானை இரவு முதல் மருதமலை வனத்தில் படுத்துள்ளது.
எங்களுக்கு தகவல் வந்தவுடன் சம்பவ இடத்திற்கு மருத்துவர் குழுவுடன் சென்று யானைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. யானைக்கு வாழைப்பழம் அளிக்கப்பட்ட நிலையில், அதனை சாப்பிட்டது. வயிறு பிரச்சனையால் யானையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த யானை 13 யானைகள் கொண்ட குழுவை சேர்ந்தது.
அந்த யானை கூட்டம் அருகில் சுற்றி கொண்டு இருப்பதால், சிகிச்சை அளிக்கப்படும் இடத்தின் அருகே கண்காணிப்பு பணியில் வனத்துறை குழு ஈடுபட்டு உள்ளனர். யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குட்டியானை அங்கேயே இருந்தாலும் சிகிச்சை அளிக்கும்போது எவ்வித தொல்லையும் தரவில்லை. குட்டி யானையையும் கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, யானையை பரிசோதித்த வன கால்நடை மருத்துவர் சுகுமார் கூறியதாவது, “தாய் யானைக்கு நேற்றிலிருந்து தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம். கிட்டதட்ட 30 பாட்டில்கள் அளவிற்கு குளுகோஸ் யானையின் இரத்தத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆன்ட்டி பயாட்டிக், ஆன்ட்டி இன்ஃப்ளமேட்ரிக் போன்ற சத்து மருந்துகள் தாய் யானைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளித்த பிறகு, நேற்று ஜேசிபி வாகனம் மூலம் யானையை எழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னங்கால்களை ஊன்றி எழ முயற்சித்தபோதும், முன்னங்கால்களை ஊன்றி எழ முடியவில்லை.
தொடர்ந்து இன்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. யானையை எழுப்பும் விதமாக கிரேன் மூலம், யானையின் உடலில் பெல்ட் அணிவித்து நிற்க வைத்தோம். யானையால் முழுமையாக நிற்க முடியவில்லை.
யானையின் உடலில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம். யானை விரைவில் நலமுடன் எழுந்து நிற்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை ஆணையர் சுப்ரியா சாஹூ, “கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டுப் பெண் யானை எழுந்திருக்க முடியாமல் தரையில் சாய்ந்து கிடந்தது. அதன் அருகே 3 மாதமே ஆன குட்டியானை சுற்றி வந்தது.
இந்த யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. யானை கிரேன் மூலம் எழுந்து நிற்கவைக்கப்பட்டது. தற்போது யானை நலமுடன் உள்ளது. அதன் குட்டிக்கு உணவளிக்கிறது. இருந்தபோதும், தாய் யானையின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஸ்வரூப வெயில்: தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு!
பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ!