கோவை நகரில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் பதிவாகியுள்ளன.
உலகம் முழுவதும் பலதுறைகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மோசடிகளும் வளர்ந்து வருகின்றன.
வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் கார்டின் 13 இலக்க எண்ணை பெற்று பண மோசடி செய்தது தொடங்கி தற்போது காவல்துறை, சிபிஐ அதிகாரிகள் போல பேசி ஆன்லைன் மோசடி என மோசடிகள் தினம் தினம் வளர்ந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் விற்பனை செயலி மூலம் கார், பைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி பதிவு செய்து, அதன் மூலம் தொடர்பு கொள்பவர்களிடம், ஏதேதோ காரணங்களை கூறி முன் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றுவது, ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடுவது, ஆன்லைனில் பகுதி நேர வேலை என்று கூறி மோசடியில் சிக்க வைப்பது என பல வகைகளில் தற்போது பணமோசடிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவை நகரில் மட்டும் கடந்த 5 மாதங்களில் 2,446 சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் பதிவாகி உள்ளதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சைபர் கிரைம் மோசடிகள் மூலம் பொதுமக்கள் ரூ.53.07 கோடி வரை பணம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், ரூ.4.31 கோடியை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறை தரப்பில், “கோவை நகருக்கு உட்பட பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 10 – 15 வரையிலான ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகின்றன. இவற்றில் பெரும்பாலான புகார்கள் ஆன்லைன் பகுதி நேர வேலை, ஆன்லைன் வர்த்தகத்தில் குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் எனக்கூறி மோசடி செய்ததாக இருக்கிறது.
இந்த மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ஏதேனும் குறுந்தகவல் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்.
இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் பட்டதாரிகள், பொறியியலாளர்கள், ஐடி ஊழியர்களாகவே உள்ளனர். சைபர் கிரைம் மோசடி தொடர்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பணம் தொடர்பாக வரும் வேண்டுகோள்களை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். நாம் வாழ்நாளில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கவனமுடன் செயல்பட்டால் இழக்காமல் இருக்கலாம்.
உங்களுக்கு யாரோ பார்சலில் போதைப்பொருள் அனுப்பி உள்ளனர் என சிபிஐ அதிகாரிபோல பேசுவார்கள், பின்னணி செட்டப்பில் வாக்கி டாக்கியின் ஒலி கேட்கும்.
இதனால் எதிர் முனையில் பேசுவர்களுக்கு பயத்தை காட்டி, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க பணம் அனுப்ப வேண்டும் எனக்கூறி சமீபகாலமாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற பல்வேறு மோசடிகளை அடுக்கி கொண்டே போகலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த 5 மாதத்தில் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘நெகடிவ்’ கேரக்டரில் விஜய் அசத்திய ‘பிரியமுடன்’!
சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!