கோவையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே சின்னவேடம்பட்டியில் துடியலூர் சாலையில் விமானப் படைக்குச் சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பின் வளாகத்தின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா ஒன்றுள்ளது.
இந்த பூங்காவில் விளையாடுவதற்காக நேற்று (மே 23) மாலை பிரியா (வயது 8), ஜியான்ஸ் (வயது 6) ஆகிய சிறுவர்கள் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே சில சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் சறுக்கு விளையாட்டு விளையாடும் பகுதிக்கு சென்று விளையாட முயன்றனர். அப்போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கி உள்ளது.
இதனால் இரண்டு சிறுவர்களும் மயங்கி விழுந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், பூங்கா வளாகத்தில் உள்ள கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அங்கிருந்த விளையாட்டு உபகரணத்தில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதோடு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே அருகிருந்த மின்சார வயர்கள் சேதப்பட்டு இருந்ததும் தெரியவந்ததுள்ளது.
சிறுவர்கள் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவர் பூங்காவில் மின்வாரிய அதிகாரிகள் இன்று (மே 24) ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய மின்வாரியத்துறை அதிகாரிகள், “குடியிருப்பு சார்பாக சிறுவர்கள் பூங்காவை மேம்படுத்தி உள்ளனர்.
பூங்காவை மேம்படுத்தியபோது யுஜி கேபிளை தரை வழியில் இணைத்துள்ளனர். இதனால், மின்சாரம் கசிந்து, சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மின் இணைப்பு கொடுத்ததுடன் எங்களது பணி முடிந்துவிட்டது. குடியிருப்பு நிர்வாகம் அமைத்த தெரு விளக்கிற்கு இணைப்பு கொடுத்தில் தான் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. தரை வழி கேபில் பதித்திருந்த நிலையில், தெரு விளக்கிற்கான ஸ்விட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Poco F6: இந்தியாவில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை களமிறக்கிய போகோ