கோவை அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இன்று (அக்டோபர் 23) சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் காரில் இருந்த ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
விபத்து ஏற்ப்பட்ட பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தை ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கூறுகையில்,
“கார் யாருடையது? காரில் கேஸ் சிலிண்டர் இருந்ததா? அல்லது கேஸில் இயங்கும் காரா? என்பவை குறித்து விசாரித்து வருகிறோம். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். காரில் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யும் பணியில் 3 தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன.
காரில் இருந்த நபர், காரின் உரிமையாளர் மற்றும் நாசவேலை அல்லது சதி செயலில் யாராவது ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக 3 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றன.” என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே வெடித்து சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது. அந்த கார் மாருதி 800 ஆக இருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் இரண்டாக பிளவுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிறுவனை கயிறாகப் பயன்படுத்தி ஸ்கிப்பிங்: அதிர்ச்சி வீடியோ!
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட விஷம் : மாணவன் தற்கொலை!