“நிலத்த கொடுத்துட்டு பட்டினி கிடக்கனுமா” : டெல்டா விவசாயிகள் வேதனை!

Published On:

| By Kavi

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு, புவனகிரி தொகுதியில் தலைக்குளம், அம்பாள்புரம், நத்தமேடு, கிருஷ்ணாவரம், பூதவராயன்பேட்டை, விராலூர், பின்னலூர், வடக்கு திட்டை, தெற்கு திட்டை, ஓடையூர், ஒரத்தூர், சாவடி, நகரமலை, சின்ன நத்தம், காரைமேடு உட்பட்ட 20 கிராமங்களில் நிலக்கரி ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது விவசாய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நாங்கள் நிலத்தை கொடுக்கமாட்டோம், சொந்த இடத்தை விட்டுவிட்டால், எங்களுக்கு பிழைக்க வேறு வழியில்லை. எங்கள் எதிர்ப்பை மீறி நிலம் எடுக்கப்பட்டால் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம் என வேதனையுடன் கூறுகின்றனர் டெல்டா பகுதி விவசாயிகள்.

நிலக்கரி எடுக்கும் விவகாரத்தில், விவசாய மக்களின் மனநிலை குறித்து வடதலைக்குளம், பின்னலூர், கொளக்குடி உள்ளிட்ட பகுதி விவசாயிகளிடம் மின்னம்பலம் சார்பில் பேசினோம்.

பஞ்சநாதன்

வடதலைக்குளத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் கூறுகையில், “எனக்கு ஒரு ஏக்கர் தான் இருக்கிறது. இதை நிலக்கரிக்காக எடுத்துக்கொண்டால் விவசாயம் பாதித்துவிடும். எனக்கு 3 பெண், 2 ஆண் என 5 பிள்ளைகள் உள்ளன. ஆண் பிள்ளைகள் சலூன் வைத்திருக்கிறார்கள். பெண் பிள்ளைகளை கட்டிக்கொடுத்துவிட்டேன். சாப்பாட்டுக்கு விவசாயத்தை தவிர எனக்கு வேறு வழியில்லை. நிலத்துக்கு பணம் கொடுத்தாலும், எங்கே போய் பிழைக்கமுடியும்” என கேள்வி எழுப்பினார்.

வைத்திலிங்கம்

கொளக்குடி பகுதியைச் சேர்ந்த்த வைத்திலிங்கம், “விவசாயத்தை வைத்துத்தான் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வேண்டும். எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டால் நாங்கே எங்கே செல்வது. இவர்கள் நிலத்தை எடுத்துக்கொண்டு பணம் கொடுத்தாலும், அது வந்து சேர்வதற்குள் எங்கள் உயிர் போய்விடும். நிலம் எடுக்கவிடமாட்டோம். இவர்களிடம் நிலத்தை கொடுத்துவிட்டு பட்டினி கிடக்கமுடியுமா. இவர்கள் கொடுக்கும் வேலையில் விவசாயத்தில் உழைத்து சாப்பிடுவது போல் சாப்பிட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

Coal Mines in Delta Districts
பாலகிருஷ்ணன்

கரமேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணா, “எனக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதை பிடுங்கிக் கொண்டால் வேற பிழைப்பு இல்லை. கூலி கொடுத்துவிட்டு, வட்டிக் கட்டிக்கொண்டு ஏதோ பிழைத்துக்கொண்டிருக்கிறோம். நிலத்தை எடுக்கக் கூடாது என தனி ஒருவரால் போராட முடியுமா? என்னை போல் எல்லோரும் கேட்க வேண்டும்.
இதையும் சர்க்கார் கேட்டால் போச்சு, கேட்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும். விட்டுவிட்டுதான் போக வேண்டும். வேற கதியில்லை. சர்க்காரை மீறினால் தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள்” என்று வேதனையுடன் கூறினார்.

ஆர்.பாண்டியன்

கரமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பாண்டியன் கூறுகையில், “படித்தவர்கள் கூட சில பேர் வேலையில் இருக்கிறார்கள். சில பேர் வேலையில் இல்லை. எங்களுக்கு முக்கிய தொழில் விவசாயம் தான். 400 குடும்பத்தினர் இங்கு இருக்குறோம்.
இத்தனை பேருக்கும் ஆதாரமே இங்கு விளையக்கூடியதுதான். இவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து என்ன செய்வது.

பணத்தை வாங்கி ஒன்றும் செய்யமுடியாது. காலனி மக்கள் எல்லாம் விவசாய தொழில் தான் செய்கின்றனர். பெரும்பாலும் 4 ஏக்கர், 2 ஏக்கர் அளவில் தான் வைத்திருக்கிறார்கள். இங்கிருந்து வெளியேறினால் எதுவும் செய்ய முடியாது” என குறிப்பிட்டார்.

 

Coal Mines in Delta Districts
ராமகிருஷ்ணன்

பின்னலூர் பகுதியச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில், “விவசாயத்தையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்கள் நிலத்தையும், வீட்டையும் எடுத்துக்கொண்டு, காட்டிலோ, மோட்டிலோ இடம் கொடுப்பார்கள். அங்கு எப்படி விவசாயம் செய்ய முடியும். இதற்கு முன்பு அருகில் உள்ள நிலங்களை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் ஏமாந்துபோய் கொடுத்துவிட்டார்கள். நிலம் எடுக்கவிடமாட்டோம்” என்றார்.

Coal Mines in Delta Districts
சாந்தா

கொளக்குடியைச் சேர்ந்த சாந்தா கூறுகையில், “கஷ்டப்பட்டு சாப்பிட்டாலும் நாங்கள் இங்கேயேதான் தான் இருப்போம். எங்கள் நிலம் தான் எங்களுக்கு தேவை. கோடி, கோடியா கொடுத்தாலும் எங்கள் ஊர் சௌகர்யம் வேறு எங்கேயேயும் கிடைக்காது. தண்ணீர் வசதியோ, மற்ற வசதியோ இங்குதான் நல்லாருக்கும். நாங்கள் இந்த ஊரை வீட்டு வேறு எங்கும் போகமாட்டோம்.

நிலக்கரி எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும், அங்கு போய் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள். அவர்கள் கொடுக்கும் பணமெல்லாம் வேண்டாம்” என்றார்.
அவருடன் இருந்த மற்றொரு பெண் விவசாயி கூறுகையில், “30 வருஷமா ஒரு இடத்தில் வாழ்ந்துவிட்டு வேறு ஒரு இடத்தில் எப்படி போய் இருக்க முடியும். அது எங்களுக்கு சுத்தப்பட்டு வராது. இங்கே இருக்கக்கூடிய சௌகர்யம் வேறு எங்கு போனாலும் வராது” என்று தெரிவித்தார்.

Coal Mines in Delta Districts
வீரவேல்

தலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என்ற இளைஞர் கூறுகையில் “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் கூறினார். ஆனால், இப்போது சிதம்பரத்தை சுற்றி 20 கிராமங்களில் நிலக்கரி எடுக்கப்போவதாக மத்திய அரசு சொல்லியிருக்கிறது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்படுவர்கள். எங்கள் நிலத்தை எடுத்துக் கொண்டு ஒரு செண்டு, இரண்டு செண்டு நிலம் கொடுப்பார்கள். அதை வைத்து என்ன செய்வது.

விவசாயம் என்றால் வயதானவர்களுக்கு கூட வேலை கிடைக்கும். ஆனால் வேறு இடத்துக்கு சென்றால் அவர்களுக்கு எல்லாம் வேலை இருக்காது. குடும்பத்தில் ஒருவர் தான் வேலைக்கு செல்லும் நிலை இருக்கும். அந்த வருமானம் போதாது.
எனவே இந்த திட்டத்தை இங்கு கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மீறி கொண்டு வந்தால் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.

வணங்காமுடி

ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்: அமைச்சர் எ.வ.வேலு

ஆளுநர் ஆர்.என்.ரவியும் தொடர் சர்ச்சைகளும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share