சென்னையில்  ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’: டெண்டர் கோரிய சிஎம்டிஏ!

Published On:

| By christopher

சென்னை செம்மஞ்சேரியில் அமையவுள்ள ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ என்றழைக்கப்படும் அதிநவீன விளையாட்டு நகரத்துக்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்  (சிஎம்டிஏ) டெண்டர் கோரியுள்ளது.

105 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான மெகா விளையாட்டு நகரம் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அமைய உள்ளது.

‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனும் இந்த மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான பூர்வாங்க பணிகளை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

தொடர்ந்து விளையாட்டு நகரத்துக்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது.

இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மேலும் சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்துக்கு அருகே இந்த விளையாட்டு நகரத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருந்தது.

இங்கு நீச்சல் வளாகம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளன.

மேலும், இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய டெண்டர் மூலம் நிபுணர் குழுவை நியமிக்கவும் அரசு முடிவு செய்தது.

முன்னதாக விளையாட்டு நகரத்துக்காக இரு இடங்கள் பரிசீலிக்கப்பட்டதில், அவற்றில் ஒன்றான சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பின்புறம் விளையாட்டு நகரம் பின்னர் இறுதி செய்யப்பட்டது. தற்போது அங்கே சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் விளையாட்டு நகரத்துக்கான தொழில்நுட்ப – பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தற்போது அறிக்கை கோரியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி முதல் பொன்முடி வழக்கு விசாரணை வரை!

கிச்சன் கீர்த்தனா : கரும்புச்சாறு நட்ஸ் பர்ஃபி

பக்ரீத் பிரியாணி பரிதாபம்: அப்டேட் குமாரு

முரண்டு பிடிக்கும் அட்லி… மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்கள்… அல்லு அர்ஜூன் படம் டிராப்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment