வேலூர் சி.எம்.சி கல்லூரி ராகிங் வழக்கில் கல்லூரி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
வேலூரில் செயல்பட்டு வரும் சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது.
முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தைச் சுற்றிவர வைத்தது, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தது, தண்டால் எடுக்க வைத்தது, குட்டிக்கரணம் போட வைத்தது ஆகியவை அதில் பதிவாகியிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கு இன்று(நவம்பர் 14)பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.எம்.சி கல்லூரி நிர்வாகம் தரப்பில், “இந்த விவகாரத்தில் 7மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை வழக்கு பதிவும் செய்துள்ளது. நடந்த சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது.
விசாரணை முடியும் வரை 7மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க மாட்டோம். ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்பட்டால் மாணவர்கள் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்று உறுதி அளிக்கப்பட்டது
மேலும், ராகிங் நடக்காமல் முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், “மற்ற கல்லூரிகளில் நடக்காத இது போன்ற ராகிங் ஏன் சி.எம்.சி யில் நடந்தது? முன்கூட்டியே தடுக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை? என்று கேள்விகளை எழுப்பினர்.
கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் அது பயனில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து வழக்கை 2வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.
பிரியா
இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியதற்கு இதுதான் காரணம்: கவாஸ்கர்
கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் 30 மணி நேரம் விசாரணை, 280 கேள்விகள்!