ஜுனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்று வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கல்லூரி விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்தும், அவர்கள் ஓடி வரும்போது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆரவாரம் செய்கின்றனர்.
மேலும் தண்டால் போடவைத்தும் குட்டிக்கரணம் அடிக்க சொல்லியும் மிரட்டுகின்றனர். அதனை கண்டு பயந்து போன முதலாம் ஆண்டு மாணவர்கள் குட்டிக்கரணம் போடுகின்றனர்.
அவர்கள் கூறியபடி தண்டால் எடுக்கின்றனர். மேலும் இரண்டு மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சொல்கின்றனர். அவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றனர்.
அப்போது அது சரியில்லை என்று கூறி மீண்டும் மீண்டும் முத்தம் கொடுக்க வைக்கின்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களின் இந்த செயல்கள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும் இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள மாணவர்கள், எவ்வாறு உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை பதிவும் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து சி.எம்.சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் ராக்கிங் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகிங் தொடர்பாக சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் நடவடிக்கைக்கு உள்ளான ஏழு மாணவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதுதொடர்பாக டெல்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கும் புகார் சென்றிருக்கிறது.
இந்தநிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரி இயக்குநர் விக்ரம் மேத்யூஸ்,
மாணவர்கள் பெயர் குறிப்பிடாத கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும், அதனடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெளிவான தகவல்கள் இல்லை. சி.எம்.சி நிர்வாகம் ராகிங்கை ஒருபோதும் அனுமதிக்காது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி டெல்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ராகிங் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் கிடைக்காததால் வழக்கு பதிவு செய்யவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செல்லவில்லை.
கலை.ரா
தலித் கிறிஸ்தவர்-தலித் முஸ்லிம்: ஒதுக்க நினைக்கிறதா மத்திய அரசு?
சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!