மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

தமிழகம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டு தர கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 10) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதோடு மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டுத் தரக்கோரி மத்திய மாநில அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அதிகாலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

“தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் IND-TN-10-MM-677 மற்றும் IND-TN-10-MM-913 பதிவு எண்கள் கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் நன்கு அறிவார்.

தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வரும் நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும்.

இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.

மோனிஷா

தக்காளி பதுக்கலை தடுக்க முதல்வர் அறிவுறுத்தல்! 

அண்ணாமலைக்கு அருகதை இல்லை : உதயநிதி 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *