cm stalin programme cancelled
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 2) நடைபெறவிருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் டிசம்பர் 4 ஆம் தேதி மாலை அல்லது டிசம்பர் 5 ஆம் தேதி வட தமிழக கடலோர பகுதிகளான சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவிருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை சென்னையில் புயல் / கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, நாளை முதலமைச்சர் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக 4ஆம் தேதி வரை முதல்வர் கலந்து கொள்ளும் மற்ற நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு: ஆளுநர் மறுப்பு!
cm stalin programme cancelled