திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சியின் மூலம் இன்று (ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இதுவரை 21 மாநகராட்சிகள் இருந்தன. மக்கள் தொகை அடிப்படையில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என்று வரிசையாகத் தரம் உயர்த்தப்படும். தரத்திற்கு ஏற்ப உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படும்.
வெகு நாட்களாகத் திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் நகராட்சிகளைப் மாநகராட்சிகளாக அறிவிக்கக்கோரி தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன.
இந்த கோரிக்கையை ஏற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கடந்த வருடம் மார்ச் மாதம், மேற்குறிப்பிட்ட நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட நான்கு நகராட்சிகளை மாநகராட்சியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய நான்கு புதிய மாநகராட்சிகளை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்துவைத்தார். இத்துடன் தமிழகத்தின் மொத்த மாநகராட்சிகள் 25-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘தங்கலான்’… மாளவிகா பற்றி விக்ரம் சொன்ன அந்த விஷயம்!
எஸ்சி பட்டியலை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா? ரவிக்குமார் ஷாக்!
இந்தியை எதிர்த்து விட்டு, பாலிவுட்டில் நடிக்கலாமா? தன்னை தானே கேட்டுக் கொண்ட கீர்த்தி சுரேஷ்