கிராமப்புற மக்கள் தங்கள் புகார்களை அரசுக்கு எளிதில் தெரிவிக்கும் வகையில் ஊராட்சி மணி என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்க இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பொன்னையா ஒப்புதலுடன் இன்று (செப்டம்பர் 23) வெளியாகியுள்ள அறிவிப்பில்,
“ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் ’ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மணி’ அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 19 ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு கூடுதல் இயக்குநர் தலைமையில் காணொளி கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த காணொளி கூட்டத்தில் தொடர்பு அலுவலர் (Nodal Officer) ஆக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது ’ஊராட்சி மணி’ தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்கள் நிலை விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு ஆகியவை வழங்கப்பட்டது
இந்த ஊராட்சி மணி அழைப்பு மையத்தை வரும் 26ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். ’ஊராட்சி மணி’ அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை ’155340’ என்ற மைய எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
மாவட்டங்களில் ’ஊராட்சி மணி’ அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக (Nodal Officer) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி உங்கள் ஊரில் சாலை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, கிராம நிர்வாக அலுவலகம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் 155340 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
இந்த எண்ணுக்கு மின்னம்பலம் சார்பில் நாம் தொடர்புகொண்டபோது ஒரு பெண் அலுவலர் போனை எடுத்து, ‘வணக்கம் ஊராட்சி மணி சார்… உங்களுக்கு எந்த ஊர்… என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.
நாம், “மின்னம்பலம் பத்திரிகை சார்பில் பேசுகிறோம் மேடம். அரசு அறிவிப்பைப் பார்த்துவிட்டு இந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டிருக்கிறோம். ஊராட்சி மணியில் எந்தெந்த பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்கலாம்?” என்று கேட்டோம்.
அதற்கு அந்த பெண் அலுவலர், “மக்கள் தங்கள் ஊரில் இருக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் எதுவானாலும் எங்களுக்கு புகார் அளிக்கலாம்.
சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், ரேஷன் கடை உள்ளிட்ட அன்றாட பிரச்சினைகளை தெரிவிக்கலாம்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் புகார் பதிவு மையத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரியப்படுத்தப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்” என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 26 ஆம் தேதி தொடங்கி வைப்பதற்கு முன்பாகவே ஊராட்சி மணி திட்டம் முழுமையாக செயல்படுவதற்கான எல்லா உள்கட்டமைப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள்.
உங்கள் ஊரில் அடிப்படை பிரச்சினையா? உடனடியாக போன் பண்ணுங்க! 155340 நம்பருக்கு!
மோனிஷா
உடல் உறுப்பு தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
சாலை பாதிப்புகள்… புகார் அளிக்க செயலி: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!
வாழ்க திராவிட மாடல் ஆட்சி.
ஃபோன் செய்வது நல்லது தான். அது எப்படி ஆவணப்படுதப்படும் என்றும் புகாரின் நிலை அறிய முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இந்த திட்டம் முன்பே வேறு பெயரில் இருந்ததுதான் இப்போது சீர்படுத்தி மக்கள் பயன் பெறும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் புகாரின் தீர்வு நடைமுறை நிலை அறியமுடிகிற மாதிரி செயல்படுத்த வேண்டும். எப்படியாயினும் திட்டம் பாராட்டுக்குரியதே. நன்றி .